பொருளுக்கு விலை நிர்ணயம் செய்தல் – Part 4 (Pricing for Products and Services – Part 4) 

கடந்த வாரம் விலை நெகிழ்வு குறித்தும், விலை நெகிழ்வை பாதிக்கும் உளவியல்  காரணிகள் குறித்தும் விரிவாக பார்த்தோம். இந்த வாரம் விலை நிர்ணய அடிப்படை மாதிரிகள் குறித்து பார்க்கலாம்.   

விலை நிர்ணய மாதிரிகள்

பின்வரும் அடிப்படையான விலை மாதிரிகளை தெரிந்து கொள்வதன் மூலம் விலை நிர்ணயம் குறித்த சிறந்த புரிதலை பெற இயலும். கிடைத்த புரிதலின் நாம் வழங்கும் பொருள் அல்லது சேவைக்கு தகுந்த விலை நிர்ணய மாதிரியை பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும்.

மதிப்பு சார் விலை நிர்ணயம் (Value Based Pricing) – இன்றைய நிலையில் அதிகப்படியான நிறுவனங்கள் பயன்படுத்தும் விலை நிர்ணய முறை. நாம் வழங்கும் பொருள் அல்லது சேவையின் மூலம் வாடிக்கையாளர் பெரும் மதிப்பு என்ன என்பதன் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வது. வாடிக்கையாளர் குழுக்களிடம் கருத்து கணிப்பு நடத்தி, பெரும்பான்மையானோர் எந்த அளவுக்கு பொருளை மதிப்பிடுகிறாரார்கள் என்று புரிந்து அதன் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வது.

செலவு சார் விலை நிர்ணயம் (Cost Based Pricing) – பொருளின் உற்பத்தி செலவு, மூல தன செலவுகளை கணக்கில் எடுத்து எடுக்க வேண்டிய லாப சதவிகித அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வது செலவு சார் விலை நிர்ணயம் எனப்படும். இந்த விலையானது வாடிக்கையாளர் கொடுக்கும் விலைக்கு வெளியில் இருப்பின் உற்பத்தி செலவுகளை குறைப்பதன் மூலமோ, லாப எதிர் பார்ப்புகளை சமரசம் செய்வதன் மூலமோ ஏற்று கொள்ள வேண்டும்.

சந்தை போட்டி சார் விலை நிர்ணயம் (Competitive Pricing) – சந்தையில் நம் பொருளுக்கு இனமான அல்லது சமமான பொருளை வழங்கும் போட்டியாளர் என்ன விலை நிர்ணயம் செய்துள்ளார் என்பதன் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வது. நாம் விற்பனை செய்யும் பொருள் பேரம் பேசும் தன்மை கொண்டதாக இருப்பின் இந்த விலை நிர்ணயம் பின்பற்ற வேண்டும். விலை போட்டியானதாக இருக்க வேண்டுமே தவிர பொருள் தரம் குறைந்ததாகவோ,மலிவானதாகவோ இருக்க கூடாது.

ஊடுருவல் விலை நிர்ணயம் (Penetration pricing) – புதிதாக தொடங்கபட்ட நிறுவனங்கள் சந்தையை பிடிக்கும் நோக்கிலோ அல்லது ஏற்கனவே தொடங்கபட்ட நிறுவனங்கள் புதிய சந்தையில் பொருளை அறிமுக படுத்தி சந்தையை பிடிக்கும் நோக்கில் விலை குறைத்து வழங்குதல், அதிகப்படியான தள்ளுபடி வழங்குதல் போன்றவை அடங்கும். இந்த விலை நிர்ணயம் கவனமாக கையாள பட வேண்டும். வாடிக்கையாளர் விலை உயரும் போது பொருள் நுகர்வு குறைய வாய்ப்பு உண்டு.

சிக்கன விலை நிர்ணயம் (Economical model) – சிக்கன விலை நிர்ணயம் என்பது பேரம் பேசி வாங்கும் வாடிக்கையாளர் குழுவினை இலக்காக வைத்து நிர்ணயம் செய்யப்படுவது. போட்டி சார் விலை நிர்ணயத்துக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு இங்கு வாடிக்கையாளர் தரம் சற்று குறைவாக இருந்தாலும் பரவாயில்லை விலை கண்டிப்பாக குறைவாக வேண்டும் என்று எதிர் பார்ப்பவர்கள். அத்தியாவசியமான மிகவும் தேவையான பண்புகளை மட்டும் உள்ளடக்கி மிகவும் விலை குறைவான பொருளை உண்டாக்குவது மட்டுமே இலக்காக இருக்க வேண்டும்.

மாறுபடும் விலை நிர்ணயம் (Dynamic Pricing) –  இருப்பு மற்றும் தேவைக்கு தகுந்தவாறு மாறுபட்ட விலை நிர்ணயம் செய்வது இதன் கீழ் அடங்கும். காய்கறி விலை நிர்ணயம் இதற்கு சிறந்த உதாரணம். Uber ola போன்ற போக்குவரத்து தேவைகக்கு வாகனம் முன்பதிவு செய்யும் நிறுவனங்கள் இது போன்ற விலை நிர்ணய மாதிரியை பின்பற்றுகின்றன.

கடைந்து எடுத்தல் விலை நிர்ணயம் (Skimming Pricing) – ஊடுருவல் விலை நிர்ணயத்துக்கான நேர் எதிரான மாதிரி. பாலாடை கடைந்து எடுப்பது போல ஆரம்ப கட்ட வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான விலை நிர்ணயம் செய்து லாபத்தை அதிக படுத்தும் முறை இது. அலைபேசி, கணிப்பொறி போன்றவை இந்த முறையை பின்பற்றுகின்றன. புதிய மாதிரி அறிமுக படுத்தும் போது அதிக விலை நிர்ணயம் செய்து, பின்னர் அடுத்த மாதிரி வரும்பபோது விலை குறைப்பு செய்தல் சிறந்த உதாரணம்.

நேர அடிப்படை விலை நிர்ணயம் (Hourly pricing) –  தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் நேர அடிப்படை விலை நிர்ணய முறையை பின்பற்றுகின்றன. சேவையின் விலையானது அந்த பணியை செய்ய எடுத்துக்கொண்ட நேரத்தின் அடிப்படையில் அமையும். வெவ்வேறான திறமைகள் தேவைப்படும் சூழ் நிலையில் இந்த முறை ஒத்து வருவதில்லை.

திட்டப்பணி சார்ந்த விலை நிர்ணயம் (Project Pricing) – நேர அடிப்படை விலை நிர்ணயம் தோல்வி அடையும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் இந்த விலை நிர்ணய முறை பின்பற்ற படுகிறது. ஒரு குறிப்பிட்ட பணி அல்லது திட்டத்தை செய்து முடிக்க விலை நிர்ணயம் செய்தல் இதன் கீழ் வரும். கட்டடம் கட்டும் பணி, அரசு டெண்டர்கள் இந்த அடிப்படையில் செய்ய படுகின்றன.

அதிகம் – குறைவு விலை நிர்ணயம் (High low pricing) – இது விழா கால தள்ளுபடி விலை நிர்ணயம் என்றும் சொல்லலாம். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தள்ளுபடிகள் வழங்கி இலக்கு வாடிக்கையாளரை கவர்ந்து பொருளை பயன்படுத்த செய்யும் விலை நிர்ணய முறை. ஆயத்த ஆடை பிராண்டுகள் இந்த விலை நிர்ணய முறையை பின்பற்றுகின்றன.