பொருளுக்கு விலை நிர்ணயம் செய்தல் – Part 3 (Pricing for Products and Services – Part 3) 

கடந்த வாரம் விலை பற்றி முடிவுகளை எடுக்க கணக்கில் கொள்ள வேண்டிய காரணிகள் குறித்தும், விலை முடிவினை யாரெல்லாம் இணைந்து எடுக்க வேண்டும் என்று பார்த்தோம். இந்த வாரம் விலை நெகிழ்வு குறித்தும், விலை நெகிழ்வை பாதிக்கும் உளவியல்  காரணிகள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.    

விலை நிர்ணயம் என்பது உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் (Rope walking) நடப்பது போன்ற ஒரு செயல். கயிற்றின் ஆரம்ப முனை நிறுவனத்தின் இன்றைய நிலை. கயிற்றின் மறு முனை நிறுவனத்தின் எதிர்காலம். நடந்து கொண்டிருக்கும் போது கயிற்றின் ஒரு புறம் விழுந்தால் வாடிக்கையாளர் இழப்பு, மறுபுறம் விழுந்தால் போட்டியாளரின் வெற்றி. சிறு தவறும் தொழிலில் பெரும் சேதம் விளைவிக்கும். பரிசோதனைகள் செய்யலாம் ஆனால் அடிப்படைகள் தெளிவாக இருக்க வேண்டும்.விலை நிர்ணயம் என்பது கவனமாகவும் நுணுக்கமாகவும் கையாள பட வேண்டிய விஷயம்.

நுகர்வோராக எந்த ஒரு பொருள் அல்லது சேவையை வாங்கும்போதும் அதனுடைய விலை நிர்ணயம் நிர்வாகத்தில் எவ்வாறு நிர்ணயம் செய்ய பட்டிருக்கும் என்று யோசிக்க பழக வேண்டும். ஒரு சில பொருட்களின் விலையை அதிகம் என்றும், ஒரு சில பொருட்களின் விலையை சரியான விலை என்றும், மற்ற சில பொருட்களின் விலையை விலை குறைவாக உள்ளது என்றும் நாம் கருதுவது ஏன் என்ற சிந்தனை வளர வேண்டும். அதே போல நாம் குறைவானது என்று நினைக்கும் பொருளுக்கு மற்றொருவர் அதிகம் என்றும், நாம் அதிகம் என்று நினைக்கும் பொருளுக்கு மற்றொருவர் சரியானது என்றும் மாறுபட்ட கருத்துகள் எழுகிறது என்றும் யோசிக்க பழக வேண்டும். இது போன்று செய்வதன் மூலம் விலை நிர்ணயம் குறித்து விழிப்புணர்வு கிடைக்கும். அதன் கூடவே பல்வேறு சந்தேகங்களும் எழும்.  

விலை நிர்ணயம் குறித்த சந்தேகங்களுக்கு விடை தேட வேண்டும் என்றால், விலை நிர்ணயத்தின் அடிப்படை என்ன, அதனுடைய மாதிரிகள் என்ன, விலை நிர்ணயம் பொருளின் நுகர்வை எப்படி பாதிக்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

விலை நெகிழ்வு (Price elasticity)

ஒரு குறிப்பிட்ட பொருளின் விலையில் ஏற்படும் மாற்றம் அந்த பொருளின் தேவையை (Demand) அல்லது வழங்கலை (Supply) எவ்வாறு பாதிக்கிறது என்பது தேவையின் விலை நெகிழ்வு (price elasticity of demand) அல்லது வழங்கலின் விலை நெகிழ்வு (Price elasticity of supply) என்று அழைக்கப்படுகிறது.

10 விழுக்காடு விலை குறைந்தால், அதிகரிக்கும் தேவை சமமான விகிதத்தில் இருக்கும் என்று கூறமுடியாது. எடுத்துக்காட்டாக உப்பு, சர்க்கரை, அலைபேசிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்றவையின் விலை 10 விழுக்காடு குறைந்தால், அவற்றின் தேவை 10 விழுக்காடு அதிகரிக்கும் என்று கூறமுடியாது. விலை குறையும் பொழுது ஒருசில பொருட்களின் தேவை/வழங்கல் அதிக விகிதத்தில் கூட வாய்ப்பு உண்டு. ஆனால் வேறு சில பொருட்களின் தேவை/வழங்கல் அதிகமான விகிதத்தில் கூட வாய்ப்பு இருக்காது.

இதைத்தான் பொருளியலில் ஒருசில பொருட்கள் தேவை நெகிழ்ச்சியுள்ளவை (Elastic) என்றும் ஒரு சிலவற்றை நெகிழ்ச்சியற்றவை (Inelastic) என்றும் குறிப்பிடுகிறார்கள். இன்னும் குறிப்பாக தேவை/ வழங்கல் நெகிழ்ச்சி என்பது பொருள்களின் விலை மாற்றத்தினால் பொருள்களின் தேவைகள்/வழங்கல் எவ்வாறு மாறுகின்றன என்பது குறித்ததாகும்.

தேவையின் விலை நெகிழ்வு (Price elasticity of demand) = தேவையில் ஏற்படும் சதவிகித மாற்றம் ( % of change in demand)/ விலையில் ஏற்படும் சதவிகித மாற்றம் (% of change in price) 

வழங்கலின் விலை நெகிழ்வு (Price elasticity of supply) = வழங்கலில் ஏற்படும் சதவிகித மாற்றம் ( % of change in supply)/ விலையில் ஏற்படும் சதவிகித மாற்றம் (% of change in price) 

இந்த இரண்டு நெகிழ்வுகளும் இணைந்து எந்த பொருட்கள் எந்த விலையில் உற்பத்தி செய்யபட வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன. 

விலை நெகிழ்வின் வகைகள்

மேலே உள்ள சூத்திரத்தில் விலை மாற்றத்தின் சதவிகிதத்தையும், அதனால் பொருளின் நுகர்வில் ஏற்படும் மாற்ற சதவிகிதத்தையும் உள்ளீடு செய்வதன் மூலம் கிடைக்கும் தீர்வுகளின் அடிப்படையில் பின்வருமாறு பிரிக்கலாம்.   

விலை நெகிழ்வு = முடிவிலி (infinite) இங்கு விலையில் ஏற்படும் மாற்றம் தேவை அல்லது வழங்கலை 0 என்ற அளவுக்கு கொண்டு செல்லும் = பூரண நெகிழ்வு (Perfect Elastic)

விலை நெகிழ்வு = >1 இங்கு விலையில் ஏற்படும் மாற்றம் தேவை அல்லது வழங்கலை குறிப்பிட தகுந்த (Significant Change) அளவு பாதிக்கும் = நெகிழ்வு பொருள் (Elastic) 

விலை நெகிழ்வு = 1 இங்கு விலையில் ஏற்படும் மாற்றம் தேவை அல்லது வழங்கலை அதே (Same Change) அளவு பாதிக்கும் = சமமான நெகிழ்வு பொருள் (unitary Elastic) 

விலை நெகிழ்வு = <1 இங்கு விலையில் ஏற்படும் மாற்றம் தேவை அல்லது வழங்கலில் எந்த ஒரு குறிப்பிட தகுந்த (Significant Change) அளவு பாதிப்பை ஏற்படுத்தாது = நெகிழ்வு இல்லாத நிலை (Inelastic)

விலை நெகிழ்வு = 0 இங்கு விலையில் ஏற்படும் மாற்றம் தேவை அல்லது வழங்கலில் சிறு மாற்றத்தை கூட ஏற்படுத்தாது = பூரண நெகிழ்வற்ற நிலை  (Perfect Inelastic).

தேவை/வழங்கல் நெகிழ்வின் பயன்பாடு

பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய உதவும். ஒரு பொருளின் தேவை நெகிழ்ச்சி கொண்டதாக இருந்தால் விலையைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும். நெகிழ்ச்சியற்றதாக இருந்தால் அதன் விலையை அதிகமாக நிர்ணயிக்கலாம்.

பல்வேறு பகுதிகளில் உள்ள வெவ்வேறு சந்தைகளில் ஒரேமாதிரியான பொருளைப் பல விலைகளில் விற்க இயலும். தேவை நெகிழ்ச்சியுள்ள சந்தைகளில் குறைந்த விலைக்கும், தேவை நெகிழ்ச்சியற்ற சந்தைகளில் அதிகவிலைக்கும் விற்க இயலும்.   

பன்னாட்டு வணிகத்தில், ஏற்றுமதி செய்யும் பொருள் தேவை நெகிழ்வற்றதாக இருந்தால் விலை ஏற்றுமதியாளருக்கு சாதகமாக அமையும்.

ஒரு குறிப்பிட்ட தொழிலில் தொழிலாளர்களுக்கான தேவை நெகிழ்ச்சியற்றதாக இருக்குமானல் பணியாளர்கள் கேட்கும் ஊதியத்தை நிறுவனம் வழங்கும் சூழல் உண்டாகும்.அனைத்து உற்பத்தி காரணிகளையும் இதுபோல ஒப்பீடு செய்ய இயலும். 

தேவை வழங்கல் நெகிழ்வை பாதிக்கும் காரணிகள்

பொருள் எவ்வெளுக்கெவ்வளவு இன்றியமையாததாக (Essential goods) உள்ளதோ அவ்வளவு வரை அதன் தேவை நெகிழ்ச்சியற்றதாக இருக்கும். (எ கா) அரிசி, மருந்து பொருட்கள் பொருள் இன்றியமையாததாக இருந்தால், விலை ஏற்றாத்தாழ்வுகளை கணக்கில் கொள்ளாமல் வாங்கிப் பயன்படுத்த வேண்டியது கட்டாயம். ஆடம்பரப் பொருள்கள் (Luxury goods) மிகவும் தேவை நெகிழ்ச்சி உள்ளவைகளாக இருக்கும். (எ கா) கார், குளிர்சாதன கருவிகள்

வருமானத்தின் பெரும் பகுதி (significant portion of income) ஒரு பொருளில் செலவிடப்பட்டால் அதன் தேவை நெகிழ்ச்சியுள்ளதாக இருக்கும். (எ கா) வீட்டு வாடகை மாறாக குறைவான பகுதி செலவிடப்பட்டால் அதன் தேவை நெகிழ்ச்சியற்றதாக இருக்கும். (எ கா) தினசரி நாளேடுகள் 

ஒரு பொருளுக்குப் பதிலீட்டுப் பொருள்கள் (substitute goods) இருந்தால் அந்த பொருளுக்கு நெகிழ்வான தேவை இருக்கும். (எ கா) அச்சு நாளேடுகள் vs அலைபேசி செயலிகள் இல்லையென்றால் தேவை நெகிழ்வற்றதாக இருக்கும். (எ கா)பெட்ரோல் , டீசல் மற்றும் எரிவாயு

பழக்கத்தினால் (Habits) ஒருசில பொருட்கள் அவசியமாகத் தேவைப்படும் பொழுது தேவை நெகிழ்வற்றதாக இருக்கும். (எ கா) பேஸ்ட், பிரஷ், சோப், வாசனை திரவியங்கள்  

பலபயன்களுக்கு (Multiple uses) ஒரு பொருள் தேவைப்படும் பொழுது அதன் தேவை நெகிழ்வானதாக இருக்கும் (எ கா) அலைபேசி

நுகர்ச்சியை (Postponing consumption) ஒத்திப்போடும் தன்மையுடைய பொருள்களுக்கு தேவை நெகிழ்ச்சி அதிகமாக இருக்கும். (எ கா) திரை அரங்குகள், கேளிக்கை விடுதிகள், சுற்றுலா போன்றவை. 

விலை நிர்ணயத்தை பாதிக்கும் உளவியல் காரணிகள்

விலை நிர்ணயத்தின் நுணுக்கங்களும், யுக்திகளும் (The strategy and tactics of pricing) என்ற புத்தகம் விலை நிர்ணயத்தை பாதிக்கும் 9 உளவியல் காரணிகளை விளக்குகிறது.

  1. ஒப்பீட்டு விலை விளைவு (Reference price effect) – ஒரு பொருளுக்கு மாற்றாக கருதப்படும் பொருளின் விலை மற்றும் அதன் மாற்றம் பொருளின் விலையில் மாற்றத்தை கொடுக்கும். இந்த ஒப்பீட்டு பொருளானது சந்தை பகுப்பு,வாடிக்கையாளர் குழுக்கள், கால சூழ்நிலைகள் போன்றவற்றை பொறுத்து மாறுபடும். இதறக்கு உதாரணமாக அலை பேசி விலைகள் (mobile prices comparison) குறிப்பிடலாம்.
  2. ஒப்பீடு கடினமான விலை விளைவு (Difficult Comparison price effect) – ஒரு பொருளுக்கு இணையான மாற்று ஒப்பீடுகள் சரியாக இல்லாத பொழுது விலை மாற்றம் கணிக்க கூடியதாக இருக்காது. உதாரணமாக பிரத்யேக ஆடைகள் (Exclusive designer boutique), வீட்டு உள் அலங்காரங்கள் (Interior design) போன்றவை.
  3. மாறுவதற்கான செலவை பொறுத்த விலை விளைவு (Switching cost effect) – ஒரு பொருளில் இருந்து இன்னொரு பொருளுக்கு மாறுவதானால் ஏற்படும் செலவை பொறுத்த விலையின் மாற்றம் இந்த விளைவு. மாறுவதற்கான செலவு அதிகம் இருக்கும் பொருட்களுக்கு விலை மாற்றம் பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது. மென்பொருட்கள் இதற்கு சிறந்த உதாரணம். Windows os இல் இருந்து apple os க்கு மாறும் செலவின் காரணமாக விலை பொறுத்த மாற்றம் பெரிதாக இருக்காது. மாறுவதற்கான செலவு குறைவாக இருக்கும் பொருட்கள் மிகுந்த விலை நெகிழ்வானவை. இதற்கு சிறந்த உதாரணம் நுகர்வோர் செயலிகள். Flipkart மற்றும் amazon இடையே மாறும் செலவு எதுவும் இல்லை. ஆகவே பொருட்களின் விலை மிகவும் போட்டி மிக்கதாக இருக்கும்.
  4. விலை தரம் விளைவு (price quality effect) – அதிக தரம் வாய்ந்த பொருட்கள் அதிக விலை கொண்டவை என்றும், குறைந்த விலை கொண்ட பொருட்கள் குறைந்த தரமானவை என்றும் புரிந்து கொள்ளபடுகிறது. கலை மற்றும் பிரத்யேக (Art and exclusive goods) பொருட்களில் இந்த விலை விளைவை காணலாம்.
  5. செலவீன விலை விளைவு (Expenditure Price effect) – வருமானத்தின் பெரும் பகுதி ஒரு பொருளுக்கு செலவு செய்யபடும் பொது விலை குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருக்கும். வீடு கட்டுதல், திருமணம் போன்ற செலவுகள் இதில் அடங்கும்.
  6. முடிவு பயன் சார்ந்த விலை விளைவு (End benefit price effect) – பொருளை பயன்படுத்துவதால் கிடைக்கும் பிற்க்கால நன்மைகளை பொறுத்து விலை விளைவு இருக்கும். குழந்தைகளின் கல்வி கட்டணம், தொழில் முதலீடுகள் போன்றவை இது சார்ந்து இருக்கும். இவற்றின் விலை நெகிழ்வு அற்றதாக இருக்கும்.
  7. பகிரப்படும் செலவுகளின் விலை விளைவு (shared cost price effect) – ஒரு பொருளுக்கான செலவுகள் பகிரப்படும் போது அதனால் கிடைக்கும் பயன்களை பொறுத்து விலை விளைவு இருக்கும். தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்க கட்டணங்கள், வாகன நிறுத்த கட்டணம் போன்றவை இதில் அடங்கும். 
  8. நியாயமான விலை விளைவு (Fairness Price) – ஒரு பொருள் அல்லது சேவையின் விலையானது, வாங்கும் தேவையை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர் நினைக்கும் நியாயமான விலைக்கு மேலோ கீழோ வேறுபட்டு இருக்கும் சூழ் நிலையில் பொருளின் நுகர்வு விலை சார்ந்து மாறுபடும்.
  9. கட்டமைத்தல் விலை விளைவு (Framing effect) – சமமான இழப்பு மற்றும் லாபத்தில்(Equal profit and loss), இழப்பு தரும் வேதனையானது, லாபம் அல்லது சேமிப்பு தரும் மகிழ்வை விட அதிகம். 50 ரூபாய் இழப்பு என்பது 50 ரூபாய் சேமிப்பு என்பதும் எண்ணிக்கை அளவில் ஒன்று என்றாலும் உணர்வு அடிப்படையில் வேறு வேறு   

அனைத்தும் உள்ளடங்கிய விலை என்பதற்கும், ஒவ்வொரு பாகமும் என்ன விலை என்பதற்கும் உள்ள வேறுபாடுகளால் ஏற்படும் விளைவுகள் கட்டமைத்தல் விலை விளைவு எனப்படும். சுற்றுலா துறையில் இதனை நன்கு உணரலாம்.விமான டிக்கெட்டுகள் உணவோடு சேர்த்து 5000 என்பதற்கும், விமானத்துக்கு மட்டும் 4000 என்பதற்கும் உள்ள வேறுபாடு கட்டமைத்தல் விலை விளைவுக்கு எடுத்துக்காட்டு. 

மேலே கூறப்பட்ட விலை விளைவுகளை நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களின் எடுத்துக்காட்டுகளோடு புரிந்து கொள்வதன் மூலம் விலை நிர்ணயம் விற்பனையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை உணர முடியும்.

அடுத்த வாரம் விலை நிர்ணய மாதிரிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.