Business Model Canvas (BMC) – Part 1 வணிக/தொழில் வடிவமைப்பு மாதிரி வரைபடங்கள் – பகுதி 1

“அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல்”

ஒரு செயலையோ அல்லது தொழிலையோ செய்யும் போது, அதனால் வரும் இழப்புகளையும், விளைவுகளையும், லாபங்களையும் கருதியே முடிவுகளை எடுக்க வேண்டும்.

தொழில் தொடங்கும் போது நேர்மறையான எண்ணத்துடன் (Positive Attitude) தான் தொடங்க வேண்டும். மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. ஆனால் திட்டமிடல் இல்லாத நேர்மறை எண்ணம், எதிர்மறை எண்ணத்தை விட ஆபத்தானது. எதிர்மறை எண்ணம் குழியில் தள்ளும் என்றால், சரியான திட்டமிடல் இல்லாத நேர்மறை எண்ணம் மீண்டுவர வழி இல்லாத திக்கற்ற அதலபாதாளத்தில் தள்ளிவிடும். சரியான  நேர்மறை எண்ணம் என்பது தொழில் குறித்து நன்கு ஆராய்ந்து திட்டமிடல் செய்தபின் வர வேண்டியது. இவ்வாறு வரும் நேர்மறை எண்ணமானது சரிவுகளை சமாளித்து நிறுவனங்களை கட்டமைக்க உதவும்.

சரியான திட்டமிடல் என்பது முறையான திட்ட ஆவணம் தயார் செய்வதில் தொடங்குகிறது. திட்டமிடல் ஆவணம் (Planning Document) என்பது பல்வேறு கால கட்டங்களில், நிறுவனத்தின் பல்வேறு படிநிலைகளில், பல்வேறு துறைகளால் எதிர்கால செயல்கள்(Action), திசைகள்(Direction), இலக்குகள்(Target) குறித்து கணித்து (Predictive) எழுதப்படும் ஆவணம்.

திட்டமிடல் செய்வதற்கு பல்வேறு ஆவண மாதிரிகள் உள்ளன. துறை வாரியாக, தொழில் வாரியாக, தொழிலின் வயது மற்றும் நிலை வாரியாக, தேவை வாரியாக என்று ஒவ்வொரு திட்டமிடலுக்கும் வேறு வேறு வகையான மாதிரிகள் உள்ளன.  புத்தொழில் ஆரம்பிக்கும் அனைவரும்   தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான மிகவும் அத்தியவசியமான ஒரு  திட்டமிடல் ஆவணம் வணிக வடிவமைப்பு மாதிரி வரைபடம் .   

தொழில், வணிக வடிவமைப்பு மாதிரி வரைபடம் Business Model Canvas (BMC)

கட்டிடம் கட்டுவதற்கு முன்னர் வடிவமைப்பு வரைபடம் (Design) எவ்வளவு முக்கியமோ, அந்த அளவு தொழில் வடிவமைப்பு மாதிரி வரைபடம் முக்கியம்.

புத்தொழில் புரிவோரும், தொழிலின் ஆரம்ப நிலையில் இருப்போரும், தொழில் குறித்த அடிப்படை புரிதலை (Fundamentals) பெறவும்,

நிறுவனர்களுக்கும், நிறுவனத்தின் முக்கிய பணியாளர்களுக்கும் நிறுவனத்தின் கொள்கைகள் (Policies), வாடிக்கையாளர் தேவைகள் (Customer Needs), முன்னிலை படுத்த வேண்டியவைகள் (Priorities) குறித்து ஒருமித்த கருத்தை (Consensus) உண்டாக்கிடவும்,

எப்பொழுதெல்லாம் தொழில் செல்லும் திசைகளில் சரிவுகளோ, பள்ளங்களோ வருகிறதோ அப்பொழுதெல்லாம் அடிப்படையை சீராய்வு (Analysis) செய்திடவும்,

புத்தொழில் முனைவோர் பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்ட ஒரு தொழில் திட்டமிடல் மாதிரிதான் Business Model Canvas (BMC) எனப்படும் தொழில்/வணிக மாதிரி வரைபடம்.  

2010-ல் ‘அலெக்ஸாண்டர் ஆஸ்டர்வால்டர்’ என்ற ஸ்விஸ் நாட்டு பிசினஸ் எழுத்தாளர் மற்றும் தொழிலதிபர் படைத்த சித்தாந்தம் இந்த வணிக வடிவமைப்பு மாதிரி வரைபடம். 

தொழில் மாதிரி வரைபடத்தின் பலம், பலவீனங்கள், எப்பொழுது செய்வது, யார் செய்வது, எப்படி செய்வது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.

தொழில், வணிக மாதிரி வரைபடம் என்றால் என்ன?

தொழிலின் செயல்பாடுகள் குறித்த பொதுவான(Common), அனைத்தையும் உள்ளடக்கிய (Inclusive), விரிவான (Broad), அடிப்படைகளை (Fundamentals) குறிப்பிட்ட வரைபட அமைப்பில் எழுதிடும் முறைக்கு தொழில் வணிக மாதிரி வரைபடம் என்று பெயர்.

உங்கள் தொழில் பற்றிய யூகங்களை (Assumptions) முறைப்படுத்தி, தொழிலுக்குத் தேவையான முக்கிய காரணிகள், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அம்சங்கள், ஏதேனும் விட்டுவிட்டீர்களா, சரியாக திட்டமிடாமல் இருந்துவிட்டீர்களா என்று அறிவுறுத்தும் வரைபடம்.

இந்த வரைபடமானது இடமிருந்து வலமாக ஒன்பது பாகங்களாக கீழ்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  1. முக்கிய கூட்டாளிகள் (Key Partners)
  2. முக்கிய செயல்கள் (Key Activities)
  3. முக்கிய வளங்கள் (Key Resources)
  4. செலவு அமைப்புகள் (Cost structure)
  5. தொழில் மதிப்பு வரையறைகள் (Value Propositions)
  6. வாடிக்கையாளர் உறவுகள் (Customer Relationships)
  7. தொடர்பு வழிகள் (Channels)
  8. வாடிக்கையாளர் குழுக்கள் (Customer Segments)
  9. வருவாய் வழிகள் (Revenue Streams)

தொழில், வணிக மாதிரி வரைபடத்தின் நன்மைகள் என்ன ?

வணிக மாதிரி வரைபடமானது நிறுவனருக்கு தொழில் குறித்த முழுமையான அடிப்படை கண்ணோட்டத்தை (Basic Overview) வழங்குகிறது. 

பல பக்கங்களுக்கு எழுதப்பட்ட வணிக திட்டத்தை (Business Plan) விட, ஒரு பக்க வணிக மாதிரி வரைபடம் (BMC) இலக்குகளை எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறது. வரைபடமாக (Pictorial) இருப்பதாலும், ஒரு பக்கத்தில் (One pager) இருப்பதாலும் புரிந்து கொள்வது எளிது.

மாற்றங்களை (Change) மேற்கொள்வது எளிது. மேற்கொள்ள படும் ஒரு மாற்றம் மற்ற செயல்களை (Activities) எவ்வாறு பாதிக்கும் என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.       

வணிக மாதிரி வரைபடம் வாடிக்கையாளரை மையப்படுத்தி (Customer Centric) நிறுவனத்தின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைப்பதால், மாறி வரும் தொழில் சூழ்நிலைகளுக்கும், வாடிக்கையாளர் தேவைகளுக்கும் தொழிலை தகவமைத்து(Survival), திட்டங்களை தீட்டிட உதவுகிறது.

இந்த வரைபடமானது தொழில் எந்திரம் என்பது ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்கும் சிக்கலான அமைப்பு (Integrated complex Engine) என்பதையும், ஒன்றுடன் ஒன்று ஒத்திசைந்து (Sync) செயல் படுவதால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதையும் தெளிவாக உணர்த்தும்.

துறை வாரியாக தனி தனியாக செயல்படும் மேலாளர்களுக்கு (Functional managers) தொழிலின் அனைத்து துறைகளையும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் புரிந்து கொள்ள இந்த வணிக மாதிரி வரைபடம் உதவும்.

தொழிலின் அனைத்து முக்கிய புள்ளிகளையும் ஒரு இடத்தில் இணைப்பதன் மூலம் தோல்விகளை குறைக்க உதவுகிறது.

தொழில் மாதிரி வரைபடம் பல்வேறு தொழில்களில் பரிசோதிக்கபட்டு நிரூபணமான (Tested and Proven Model) வரைமுறை என்பதால் உலகளாவிய அளவில் அனைவராலும் ஏற்றுகொள்ள பட்ட அமைப்பாக உள்ளது.

புதிய வணிக மாதிரிகள், புத்தாக்க யோசனைகள், ஏற்கனவே உள்ள தொழிலில் உள்ள பலம், பலவீனங்கள், போட்டியாளர்களின் புது மாதிரிகள் போன்றவற்றை முழுமையாக அலசி ஆராய இந்த வணிக மாதிரி வரைபடம் உதவுகிறது.

செய்ய நினைக்கும் தொழில் பற்றி நீங்கள் மனதில் ஆயிரம் விஷயங்கள் நினைத்து வைத்திருக்கலாம். உள்ளத்திலேயே அதற்கு உருவம் கூட தந்திருக்கலாம். ஆனால் அதிலுள்ள குறைகளை, வில்லங்கங்களை அறிய அதை முறையாய் அதற்கான வடிவத்தில் எழுதிப்பார்ப்பது புத்திசாலித்தனம். அப்படி செய்யும் போதுதான் அதில் உள்ள ஓட்டைகள் ஒளிவு மறைவில்லாமல் தெரியும். அதை அடைக்கும் வழியும் புரியும். தொழில் மாதிரியை வரையறை செய்வதன் மூலம், தொழிலில் உள்ள இடைவெளிகளையும் புதிய வாய்ப்புகளையும் கண்டுபிடிக்க முடியும்.

தொழில் மாதிரி வடிவமைப்பு வரைபடத்தின் வரம்புகள் என்ன ?

தொழில் வடிவமைப்பு மாதிரி வரைபடத்தின் வரம்புகளை அறிந்து கொள்வதன் மூலம் , இன்னும் சிறப்பாக தொழில் வடிவமைப்பு மாதிரியை எழுதிட இயலும். 

  1. சரியான வரிசையில் (Not in Order)இல்லை. எதை முதலில் எழுதுவது என்ற குழப்பம் ஏற்படும்.
  2. ஒரு பக்கத்தில் எழுதுவதால் மேலோட்டமான அடிப்படை (Broad & Basic) புரிதலை வழங்கும். ஆழமான புரிதலுக்கு (Deep Understanding) இணைப்பு ஆவணங்கள் தேவைப்படும்.
  3. போட்டிகள் (Competition) மற்றும் இதர வெளிப்புற புறசூழல்கள் (External factors) கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.
  4. அரசியல்(Political), பொருளாதார(Economical), சமூக (Social), தொழில்நுட்ப (Technological), காலநிலை மற்றும் சுற்றுபுற சூழல் (Climate & Environment) மாறுபடுகளால் ஏற்படும் விளைவுகள் கருத்தில் கொள்ளப்படவில்லை.
  5. செலவு (Cost) மற்றும் வருவாய்(Revenue) மட்டும் கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. நிகர லாபம் (Net Profit) குறித்த கணக்கீடுகள் இல்லை.
  6. தொழிலை பாதிக்கும் வரலாறு (History) மற்றும் எதிர்காலம் (Future) குறித்த தகவல்கள் வரைபடத்தில் இல்லை.
  7. சாதுரியமான யுக்திகள் (Strategy), வியாபார தந்திரங்கள் (Tactics), நுணுக்கமான துறை வாரியான (Departmental Planning) திட்டமிடல் இல்லை.
  8. மிகவும் ஆரம்ப கட்டத்தில் உள்ள தொழில்கள் (Early stage Companies) ஒரு சில கட்டங்களில் எதுவும் எழுத இயலாத சூழல் ஏற்படும்.
  9. சரியான கண்காணிப்பு அளவீடுகள் (Monitoring Metrics) இல்லை. திட்டமிடலுக்கும் செயலுக்கும் (Plan vs Action) உள்ள வேறுபாடுகள் கருதப்பட வில்லை.
  10. இது ஒரு நிலையான மாதிரி (Standard Model) அல்ல. ஒரு கட்டத்தில் ஏற்படும் மாறுதல் மீதி உள்ள அனைத்தையும் மாற்றும் வகையில் உள்ளது.
  11. பொருள் (Product) என்ன என்பது தெளிவாக முடிவு செய்த பின்னர் தான் இதை எழத இயலும்.

தொழிலுக்கான வடிவமைப்பு மாதிரி (Business Model Canvas) என்பதை விட இதனை ஒரு விற்பனை வடிவமைப்பு மாதிரி (Sales Model Canvas) என்று கூறுவது பொருந்தும். 

தொழில் மாதிரி வரைபடத்தின் அடிப்படைகளையும், நன்மைகளையும், வரம்புகளையும் புரிந்து கொள்வது நம் தொழிலுக்கு தகுந்தவாறு  எழுதுவது என்று வரும்போது மிகவும் உதவியாக இருக்கும். வணிக மாதிரி வரைபடத்தை எழுதும் சரியான வரிசை என்ன அதனை எவ்வாறு எழுதுவது என்பதனை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.